Thursday, October 8, 2009

ஏய் என் பேனாவே!


ஏய் என் பேனாவே!
ஏன் எழுதத்துடிக்கிறாய்?
என்னை சிறையிலிடப்போகிறாயா?
இல்லை சிரச்சேதம் செய்யப்போகிறாயா?
நீதி செத்துவிட்ட தேசத்தில்
உனக்கு என்ன வேலை?
அதர்மம் தலைவிரித்து ஆடுகையில்
உண்மை சொன்னால்
நீ சிலுவையில் அறையப்படுவாய்
அல்லது சிறையிடப்படுவாய்

ஏய் என் பேனாவே!
போர் நடந்த போர்
தவிர்ப்பு வலையத்தில்
கோரமாக கொல்லப்பட்ட
எம் உறவுகள் பற்றி
ஏதும் எழுதிவிடாதே
உண்மை செல்வது குற்றம் என்று
இருபது என்ன, முப்பது ஆண்டுகளும்
சிறையிலிடக்கூடும்

ஐயோ என் பேனாவே!
செட்டிகுளம் கானகத்தில்
சீரழியும் எம்மவர் வாழ்க்கைபற்றி
ஏதேனும் எழுதி வைத்துவிடாதே
சிவராம்,நடேசன் நிலை
எனக்கும் தந்துவிடாதே

ஏய் என் உயிர்ப் போனாவே!
இறுதிப்போரின் இறுதிக்காலத்தில்
தூய்மையான விடுதலைப்போராட்டம்
மாசுபடுத்தப்பட்ட
கதைகளை கக்கிவிடாதே
முறிந்த பனைமரமாய்
என்னையும் ஆக்கிவிடாதே

ஏய் என் நேய பேனாவே!
சொந்த நாட்டில் வதைக்கப்பட்டு
தொலைக்கப்பட்டவர்,
புதைக்கப்பட்டவர்,
சிதைக்கப்பட்டவர் கதைகளை
கிறுக்கிவிடாதே என்னையும் வதைத்து
வீசிவிட வைத்துவிடாதே

ஏய் என் தூய பேனாவே!
குற்றமற்ற குற்றவாளிகளாய்
தமிழராய் பிறந்ததே குற்றம் என்று
வழக்கும்இன்றி விசாரணையும் இன்றி
சிறை வைகப்பட்டிருக்கும்
எம்மவர் பற்றி
ஏதும் எழுதிவிடாதே
அதர்மத்தார் கையால்
என்னையும் அழித்துவிடாதே

...........செம்மதி...................
.................................................

Friday, June 5, 2009

நளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் கழிகின்றன....
-------------------------------------------------------------

செம்மதி.....................

Thursday, June 4, 2009

யார் வருவார் மீட்பராய்


__

யாரிடம் போய்ச் சொல்வது
சிதைந்துபோன எனது வாழ்வு பற்றி?
காரணம் என்ன என்று தெரியாதே
கம்பிக் கூட்டுக்குள்
கரைந்து போகும்
எனது இளமை பற்றியும்
காலைக் கடன்கூடக் கழிக்கமுடியாது
விலங்கிடப்பட்ட
எனது கைகள் பற்றியும்
மனிதனாய் இருக்கும்போதே
நரகத்தின் வேதனை காண்பது பற்றியும்
ஒரு நாளும் பசியடங்கா வயிற்றுடன்
மனித மிருகங்களின் வக்கிரகங்களால்
வதைக்கப்படுவது பற்றியும்
குற்றங்கள் சுமத்தப்படாதே நான்
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
விசித்திரத்தைபற்றியும்
யார்தான் தட்டிக்கேட்பார்கள்.

திருமணமாகியும் வெகுமதிகள் எதுவுமின்றி
என் வரவிற்காய் இன்னும் காத்திருக்கும்
அன்பான மனைவிபற்றியும்
என்னுடன் அடைக்கப்பட்ட அண்ணன்
காணாமல் போனவுடன்
எம் நிலை கண்டு அம்மா
பைத்தியமாய் அலைவது பற்றியும்
யார்தான் அக்கறை கொள்வார்?
ஆட்சி மாறும்போது
நாம் வீடு மாறுவது போல்
சிறைக்கூடங்கள் மாற்றப்படுவது பற்றியும்
பெரும் பிரச்சினைகள் மத்தியில்
எம் பிரச்சினை
சிறு பிரச்சினையாக்கப்பட்டதையும்
யார் தான் சிந்தித்துப்பார்ப்பார்?
எவர் வருவார் மீட்பராய்... ????


-----------------------------------------------

செம்மதி..................

Monday, June 1, 2009

என் நிலை என்ன?

எழுதியவர்
---------------------------------------------------------------
செம்மதி

காணவில்லைக் கணவரை-அவர்
காணமல்போனவர் பட்டியலில்
காலங்கள் கடக்கின்றன கண்ணீரோடு
அதரவு யாரும் இல்லை
அனாதரவாய் நான்  இங்கே-என்
அருமைப் பிள்ளைகளை
ஆளாக்க வேண்டி
அயராது உளைக்கையிலே
ஆந்தை விழிகள் பல-என்னை
துகில் உரியப் பார்க்கிறது
அடி மனதில் வலியுடன்
ஆத்மதிருப்திக்காய்
ஆலயம் செல்கையிலெ
அயலவரும் குத்திக்கதை பேசிடுவார்
மனசெல்லாம் ரணமாச்சு
தமிழர் பண்பாடு என்று
குங்குமம் எடுத்து வைக்கையிலே
யாருக்காக இந்தப்போட்டு
எனவசைபாடுது பல குரல்
பொட்டின்றி புவிழந்து
விதியில்நான் சென்று விட்டால்
விசித்திரமாய் பல கண்கள் மெய்கிறது
என்உடம்பில்
துணையில்லை என்ற துணிவுடன்
நோகுது ஜயோ நெஞ்சம்
என்னவனை காலன்தான் கவர்ந்தானோ -இல்லை
என்னைக் காப்பாற்ற வருவாரோ?

எனக்கே என்னைப் புரியவில்லை
என்நிலை என்ன தெரியவில்லை???
--------------------------------------------------------

Monday, November 17, 2008

வாழ்வும் வலியும்

...........செம்மதி.............
1
என்னவளே!
நானும் நீயும்
காதலித்த பள்ளிக்கூடம்
வசந்தங்களைத் தொலைத்து
வதைபட்டோர்
ஒதுங்குமிடமாச்சுகடி
காலநேரம் தெரியாமல்
கைகோர்த்து கதையளந்த
ஆலமரத்தடியில
அடிபாடு நடக்குதெண்டு
சனம் கதைக்குதடி
உன் அண்ணன்
ஊர்திரட்டி துரத்திவந்த
வயல் வெளிகள்
நாம் ஒழித்த வடலிக்கூடல்
எல்லாம் பாழ்பட்டுப் போச்சுதடி
எம் காதலுக்குக் கைகொடுத்த
காந்தனும் சாந்தனும்
களப்பலி ஆகினராம்
என்ரதம்பி முகமாலையில
முன்னுக்கு நிக்கிறானாம்
உன் அண்ணன் நெஞ்சில காயப்பட்டு
கொஸ்பிற்ரல்ல இருக்கிறானாம்

2
நீ எனக்கும் நான் உனக்கும்
முத்தமிடக் காத்திருக்கும்
ஏகாந்த இரவுகளில்
ஏதேதோ நினைவெல்லாம்
வந்து வதைத்துப்போகுதடி
உன் செவ் உதடுகள்
இயந்திரப்பறவைகள்
பிய்த்தெறிந்த குழந்தைகளின்
தசைத்துண்டகளாய்த் தெரியுதடி
பிணைந்கிருக்கையிலேயே
பிணங்களாயும் போகலாம்
என் அணைப்பில் நீ தூங்க
உன் அணைப்பில் நான் தூங்க
அகதிக்குழந்தைகளின்
அவலக்குரலும்
அடுத்தவீட்டு மரண ஓலமும்
காதைக்குடைந்து
எம்மைத்தலை குனிய வைக்குதடி
கனவிலும் பிணங்கள்தான்
காட்சிக்கு வருகுது
விடிந்ததும் அதுவே
நியமாயும் இருக்குது
எறும்புபோல சேமித்து
கட்டிய வீட்டையும்
நாசமாக்கிப் போட்டான்
பத்தாவது இடத்திலையும்
வங்கர் வெட்டியாச்சு
எங்கட பிள்ளையள்
எங்கபோட்டுதுகள்
ஏதோ இரையுது மேல
வாங்கோ போவம்
வங்கறுக்குள்ள
..............................

Wednesday, October 29, 2008

இறைமையின் பெயரால்


------செம்மதி......
............................................
இராணுவப்பிரங்கிகளுக்குள்
அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர்
குருதிச்சுனையில்
புதைந்த கவசவண்டிகள்
அப்பாவிகளின் பிணங்களின் மேல்
நகர்த்தப்படுகின்றன
துப்பாக்கிகளின் ஒவ்வோரு தோட்டாக்களிலும்
மனித உயிர்கள் குடியிருந்தன
நாளைய பகல்கள்
இன்றைய இரவுகளைக் கொடுத்து
வேண்டப்பட்டுக்கொண்டிருந்தன
நாளைய தீபாவளிக்கு
பட்டாசு வெடிக்கும் கனவுடன் துங்கிய
பிஞ்சுகளை
எறிகணைகள் பட்டாசுகளாய்
பிய்த்துப் போகிறது.
குழந்தைகள் வெடிகுண்டுச்சிதறல்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தனர்
பதுங்கு குழிகளுக்குள்
ஒரு தேசம் குடியிருந்தது
வெடிகுண்டுகளுக்குப்பயந்தவையாய்
மழை வெள்ளமும் பதுங்கு குழிக்குள்
பதுங்கிக்கொண்டது
கால்களுக்குக்கீழ் மழை வெள்ளம்
தலைக்குமேல் கந்தக மூளையர் கக்கும்
உலோகச்சிதறல்கள்
உவர்ப்பு நீரிலும் சிவப்பு நீரிலும்
கரைந்து போனது ஏதிலிகள் வாழ்வு
அகதிகளின் உணவுத்தட்டுக்களில்
ஆயுதங்கள் இடப்பட்டிருந்தன
பிணங்கள் நிலங்களை
விழுங்கிக்கொண்டிருந்கன
ஆவிகள்போரில் நிற்பதாய்
படைகளின் துணைவியற்கு
சம்பளம் வழங்கப்பட்டது
ஏழைகள் ஏலம்விடப்பட்டனர்
இறைமையின் பேயரால்
.............................................
.................................

Tuesday, October 14, 2008

கானலும் கண்ணீரும்

...........செம்மதி.............

அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்
போகும் இடம்
அவர்களுக்கே தெரியவில்லை
நடந்த பாதையில் சுவடுகள்
கேள்விக்குறிகளாய்க் கிடக்க
கச்சைகளைக் களற்றி
மகுடமாக்கிச் சூட்டப்போகிறார்கள்

பயிர் வளர்க்கச் சென்றவர்கள்
வேலியைப் பிரித்துவிட்டு
பயிரையும் பிடுங்கி எறியப் போகிறார்கள்
உடம்பிற்குள் கெட்ட ஆவி புகுந்ததுபோல
ஆக்குரோசமாகப்பேசுகிறார்கள்
பயிரை எப்படி அழிக்கலாம் என்பதுபற்றி
உரமாகிப்போனவரின்
உணர்வுகளை மிதித்து
பகட்டையும் பணத்தையும்
தேடிப்போகிறார்கள்

நல்ல தீன் கிடைக்குமென்று
முட்டைக் கோழியாகப் போகிறார்கள்
இட்டுமுடிந்ததும்
இறச்சிக் கோழியாவதற்கு
பல்லக்கில் செல்வதாய்
பாடையில் ஏறிவிட்டார்கள்
உயிர் உள்ள பிணங்களாகி
கானல் நீரில் நீச்சலடித்து
கண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறார்கள்

...................................................................................................

Tuesday, September 23, 2008

போலிகள்


------செம்மதி......

தேன் தடவப்பட்ட
நாக்குகள்
புற்றில் கருநாகம்ய்
வாய்க்குளியில்
நெழிந்து புரழ்கின்றன
ஒவ்வோரு உச்சரிப்புக்களும்
உயிர்களைப் பிடிப்பதற்காய் செல்லும்
பிசாசுகளைப்போல
வான வெளியில்
பரந்து செல்கிறது

அவர்களின்
கைகளில் இருந்து
வெள்ளைப் புறாக்கள்
பறக்கவிடப்படுகின்றன
அவற்றின் கால்கள்
இறுகக் கட்டப்பட்டிருக்கிறது

அவர்களின் முகங்கள்
நெருங்கி கீளே விழுகின்றன
அந்தக் கொடூரத்தை
பார்க்க முடியாது
கண்கள் ஒவ்வொன்றும்
ஒளி இழந்து போகிறது

அப்பாவிகளின்
கண்ணீர் கோடுகளை
களுவுவதற்கு என்று
அவர்களின்
இரத்தம் கேட்கிறார்கள்

சமாதானத்திற்காய்
சண்டையிடுவதாய்
சொல்கிறார்கள் ??? ......


நிரந்தரம் இல்லா நின்மதியில்......


------செம்மதி..........

அழகிய காட்டில்
ஆனந்தமாய் சிலமுயல்கள்
தங்கள் துணைகளுடன்
சல்லாபித்திருக்கின்றன

முயல் கூட்டங்களுக்குள் இருந்தும்
ஆட்டுக் கூட்டங்களுக்குள் இருந்தும்
மான்களைப் பிடிப்பதற்காய்
அந்தப்பயங்கர விலங்குகள்
செல்கின்றன
முயல்களையும் ஆடுகளையும்
அவை இப்போது
குறைவாகவே உண்கின்றன
இன்று அவற்றிற்கு
மான்களின் மாமிசம்
மிகவும் பிடித்திருக்கிறது

ஆட்டு குட்டிகளுக்கும்
முயல் குட்டிகளுக்கும்
இதுவே சுவர்க்கமாய் தெரிகிறது
சில நேரம்
மலைப் பாம்புகளும்
விசப் பாம்புகளும்
இந்தக் குட்டிகளை
தின்றுவிடுகின்றன

மான்களை பிடிக்க முடியயாது போனாலும்
அல்லது
அவை தின்று முடிக்கப்பட்டாலும்
அந்தக்கொடிய விலங்குகள்
பட்டினி கிடக்கப் போவதில்லை

கொடிய விலங்குகளின்
நிழல்களில்
சுவர்க்கம் காண்கின்றன
ஆட்டுக் குட்டிகள்

Thursday, September 18, 2008

தவிக்கும் தேசம்-2எழுதியவர்-------

------செம்மதி

குருவிகள் எல்லாம்
கூடு கட்டி
நிம்மதியாய் வாழுது
நாங்கள் இங்கே
வீடு விட்டு
ஊரிளந்து
ஏதிலியாய்
தெருத் தெருவாய்
அலைந்து வாழ்கிறோம்
ஓடி ஒடி
களைத்துவிட்டோம்
நாம்
கடலில் விழுந்து சாவதா?

பகல் இரவாய்
பதுங்கு குழியில்
உறைந்தும் வாழ்கிறோம்
உலோகப் பறவை
கண்டு குண்டு போட்டால்
மண்ணோடு மண்ணாய்
மறைந்தே போகிறோம்

பள்ளி கோயில்
எல்லாம் இங்கே
பாசறையாய்த் தெரியுதாம்
தமிழ்ப் பெண் வைத்திருக்கும்
கைக்குழந்தை
ஏ.கே 47 ஆகப் படுகுதாம்
சிறு குழந்தை
கிழவன் கிழவி எல்லாம்
பயங்கர வாதி என்றே கணக்கு

பச்சை அரிசிச் சோறும்
பாலும் தேனும்
புசித்து வாழ்ந்தவர்
இப்போ
விளைந்தது எல்லாம்
அழிந்ததனல்
பட்டினியாய்
பசிக்க வாழுறோம்

உதவி செய்ய வந்தவரையும்
தடுத்து துரத்திவிட்டு
எம்மை கூட்டோடு
அழிக்கவா போகிறார்?
இங்கே வாரும்
இங்கே வாரும்
என்றோ எம்மை
வீம்பாய் கூப்பிடுகிறார்
அங்கேபோனால்
சும்மாய் எம்மை விடுவாரா?
மனச்சாட்சியை
சிறைப்பிடித்து
மனித உரிமைபற்றி பேசுகிறார்

ஈழ மக்கள் நாம்படும்பாடு
யாருக்கிங்கே தெரியுது
துணிவிருந்தால்
வந்து பாரும்
உணர்ந்தால்தான்
அது உமக்குப் புரியும்

உலகத் தமிழினமே!
உங்கள் இரத்த உறவுகள் நாம்
தினம் செத்து மடிகின்றோம்
நீங்களும்
எங்களுக்காக
குரல் கொடுக்க மாட்டீரோ ??

Sunday, September 14, 2008

வன்னி/2008/9


எழுதியவர்-------

------செம்மதி
சமாதான காலத்தில்
தார் பூசப்பட்ட
சிதைந்த வீதிகள்
பயணிக்க முடியாதவாறு
படை களற்றுகின்றன
அதிகாரங்களின்
போலி முகங்கள் போல்

கூவிவரும்
றிகணைக்குப் பயந்து
ஓடி ஓடி
குறை மாதத்தில்
குழந்தை பெறுகிறாள்
கற்பினி ஒருத்தி
தெரு வோர மரத்தடியில்
சேலை மறைவில்
கணவன்
எறிகணைக்குப் பலியானான்

குழந்தைகளை
காப்பாற்றுவதாய் வரும்
கிபிர் விமானங்களின்
இரச்சல் கேட்டு பயந்து
சிதறி ஓடும் சிறுவர்கள்
அடுக்ககணம்
அடையாளம் காணப்பட்ட
இலக்காகிப் போகிறது
பிள்ளைகளின்
கல்விக் கூடம்

தண்ணி முறிப்பில்
விளைந்த கதிரை
அறுப்பதற்காய்சென்றவரின்
தலை அறுத்துப்போகிறது
பல்குழல் பிரங்கியின்
எறிகணைகள்
மல்லாவியில்
முழங்காவில்லில்
விளைந்தவற்றை வந்தவர்கள்
அள்ளிச்செல்வதாய்
குமுறுகின்றார்கள்
விவசாயிகள்
பசித்த வயிற்றுடன்

முன்ணுறு ரூபா
மண்னெண்ணையிலும்
மனித சுவாசத்திலும்
புகைத்தபடி இயங்கும்
மோட்டார் சைக்கிள்கள்
வீட்டுப் பொருட்களை
மலை போல் ஏற்றி
பண்டிவிரச்சானில் இருந்து
பத்தாவது இடம் தேடி
அலைந்து திரிகிறது

எலும்புக் கூடுகளாய்
வேயாது சிதறிக் கிடக்கும்
கொட்டில்களுக்குள்
எலும்பும் தோலுமாய்
அகதி மக்கள்
நிவாரண வண்டிகளுக்காக
இன்றும் பசித்த வயிற்றுடன்

காத்திருப்புத்கள்
தொடாகின்றன...............

Thursday, August 7, 2008

குயில்க்குஞ்சுகள்


எழுதியவர்
-------------செம்மதி


இறக்கை முறிந்து
இரத்தம் கசிய
குற்றுயிராய்க் கிடக்கிறது
குயில்க்குஞ்சு
தன்குரலைக் காட்டியதால்
அடைகாத்து
தீன்கொடுத்த
ககாங்களால்
கொத்திக்குதறப்படுகின்றன
குயில்களும்
காகங்களும்
கருமையாகவே உள்ளன
குயில்கள் கருமையில்
மறைந்துகொள்ளப் பார்க்கின்றன
குயில்களின் குரல்கள்
இனிமையாகவே உள்ளன
அவற்ரின் செயல்
ரசிக்கும்படியாக இல்லை
காகங்களின் கூடுகளில்
சாதுரியமாக
முட்டையிடும்
குயில்களுக்கு
கூடுகட்டத் தெரியவில்லையா
அல்லது
முயலவில்லையா
என்னும் எவ்வளவு கலம்தான்
காகங்களின் கூடுகளில்
பலியிடப்படும்
இந்தக்குயில்க் குஞ்சுகள்

Wednesday, August 6, 2008

முதுகில் வரையப்பட்ட பயங்கர ஓவியங்கள்


எழுதியவர்
-------------செம்மதி


நீ
நீயாகவேஇருந்தாய்
உன்மனததில்
சாத்தானின் சகாக்கள்
ஊடுருவும்வரை
நீ என்னை
அன்புடன்
கட்டியணைகடகிறாய்
என்றே நான்
நம்பிநேன்
உன் கால்களால்
படுகுழி ஒன்றுதோண்டப்படுவதை
அறியாது
நீ அன்பு போர்த்து
வந்தாய்
நான்
உன்னை நம்பிநேன்
பற்கள் வெளித்தேரியும்படியான
உதடு பிரிப்புக்களை
அழகிய சிரிப்பு என்றே
நான் ஏமாந்தேன்
என்முதுகில் நீ வரைந்த
பல பயங்கர
ஓவியங்களை
என்னால்
காணமுடியாது போயிற்று
நானும் நீயும்
சோர்ந்திருந்த
இறுதிக் காலங்களை
நினைத்துப்பார்க்கிறேன்
இருண்டதும்
கொடூர மானதுமாய்
எனக்குள் பல
கேள்விக்குறிகளாய்
சிதறிக்கிடக்கிறது
இபடபோதெல்லாம்
உன்னைப்பற்றிய
நற்கருணை
ஆராதனைகள்
எனக்குள்
இடம்பொறுவதில்லை
எனது பாதங்கள்
வலிகளைத்தாங்கி
தொடர்ந்து பயணிக்கிறது......
..................................................

Thursday, July 31, 2008

கரையும் கலாசாரம்


எழுதியவர்
-------------செம்மதி


---------------------------------------------------
அரிசிவிலை ஏறியபோதும்
விலையேறாத
சில்மிசச் சீடீக்கள்
பள்ளி செல்லும்
பையனின் கையில்தவளும்
கையடக்க கமராபோன்கள்
அதில்தினம் வக்கிரங்களின்
அரங்கேற்றம்
நிர்வாண உரையாடல்கள்
உணர்வூட்டி
உணர்விளக்கச் செய்யும்
அபத்த முயற்சிகள்
விசேட கற்கைக்கான
கொடுப்பனவாய்
அப்பனின் வியர்வைத்துளிகள்
அடுத்த நிமிடமே
வன்பானமாகும்
அற்புதங்கள்
வாயில் புகையும்
வெண்சுருட்டுக்கள்
தம்மை அறியாமலே
சிதைக்கப்படும்
இளசுகளின் எதிர்காலங்கள்
இவை
எம்மிதான பல்தேசியத்தின்
படையெடுப்புக்கள்
கருவின் கருத்தாவை
கண்டறிய
மரபணுப் பரிசோதனைகள்
கோமோன்களின்
அத்துமீறல்களால்
அடங்கி
அவஸ்தைப்படும்
பெண்மைகள்
திசை திருப்படும்
சிந்தனைகள்
இவை எம்மை
நடைப் பிணங்களாக்கும்
கூட்டுமுயற்சிகள்
-------------------------------

Wednesday, June 25, 2008

அதிகாரங்களும் அப்பாவிகளும்
எழுதியவர்
-------------செம்மதி

---------------------------------
வெடிகுண்டின் ஓசைகள்
இடியின் ஓசை
யாய்
குண்டுச்சிதறல்கள்
மழைத்துளிகளாய் போயிற்று

மூலைக்கு மூலை
முளைக்கின்றகோயில்களில்
வேளைக்கு வேளை
பூசைகள் நடக்குது
ஒரு வேளை உணவே
உருப்படியாய் இன்றி
எலும்பும் தோலுமாய்
பல சனங்கள்
அலைந்துதிரியுது

அயலில் கேட்கும்
நட்டுவ ஒலிக்கு
பக்கவத்தியமாய்
வேட்டொலிகள் கெட்கிறது
அதனால்
செத்தவர் வீட்டு
மரண ஓலத்திற்கு
ஒப்புப் பாடுவதாய்
நாதஸ்வர இசை
இதமாய் இசைக்கிறது

ஒவ்வோரு காலையும்
விடிகின்றபோது
வீதிகளில் கிடக்கும்
அப்பாவிப்பிணங்களின் நடுவே
பயணங்கள் நடக்கின்றது

அங்கும் இங்கும்
மக்களை ஏற்றி
அலைந்துதிரியும்
பேரூந்துகள்குண்டுகளால்
சல்லடையாக்கப்பட்டு
சிதைந்து கிடக்கிறது
உயிரற்றுக்கிடக்கும்தாயில்
பால் தேடுகின்றது
குழந்தை
சிறு குழந்தை
பல்குழல் பீரங்கிக்கு
பயங்கரவாதியாக
தெரிந்ததனால்
அளுகின்றாள் தாய்
கையில் தசைத்துண்டுகளுடன்

வெடிகுண்டால்
வயிறு பிளந்து
இரத்தத்தில் மிதக்கிநாள்
கற்பிணி ஒருத்தி மூச்சிழந்து
வெடிகுண்டால்
பிரசவிக்கப்பட்ட குழந்தை
என்னசெய்யும்??

மக்கள் பிரதிநிதிகள்
செல்லாக் காசாய்
செயலிழந்து போயினர்
பாவம் அவர்கள்
அதிகம் வாய்திறந்தால்
உயிரிழந்தும் போகலாம்
முன்நோரைப் போல

மானிடக்குருதியில்
பயணிக்கிறதுமாங்காய்த் தீவு
அதிகாரங்களின்இயக்கம்
சூடான இரத்தத்தில்....
-----------------------------

Friday, March 28, 2008

தவிக்கும்தேசம்


எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------தாய்மார்பு
சுரக்கமறுத்ததனால்
அழும் குழநதையின்
அழுகுரல்
முகாரியாய் ஒலித்தது
அடங்கிப்போகிறது
பட்டினியாய் இருக்கும்
பெற்றதாய் வயிறு
பற்றி எரிகின்றது
பால்மாப் பைகள்
கால்முளைத்துவிலகி ஒடுகின்றது
ஐந்து ருபாவிற்கு வாங்கிய
ஒருகிலோ வாழைப்பழத்தின் தோல்
எம் பசி போக்காது
திண்ணையில் சிதறிக்கிடக்கிறது
எம்மைப்போல
மழை ஒழுக்கில்
நனையாமல்
தாய்மடியில் தஞ்சமடையும்
தங்கையை
தாயின்கண்ணீரே
நனைக்கின்றது
எனக்கு மீசை அரும்புகிறது
வெளியெ போகவிடுகிறாள்ளில்லை
அம்மா
காதல்வந்தவிடும் என்பதற்காகஇல்லை
மரணம் வந்துவிடக்கூடாது என்பதற்காக
பள்ளிசெல்லும்
என் தங்கையை
தீண்டப்பார்க்கிறார்கள்
கைதிகளுடன்
சிறையிருக்கும்
பெண்சுகம் இன்றித்தவிக்கும்
சிறைக்காவலர்கள்
விறைத்த அங்கத்துடன்
எரிகின்ற குப்பிவிளக்கின்
மங்கிய ஒளியில்
காணாமல்ப் போன
அண்ணனின் புகைப்படம் தெரிகிறது
கூடவே அப்பாவும்
விடைகாணாப்புதிர்களாக
காணாமல் போனவர்கள்
கண்டுபிடிக்கப்படுகிறார்கள்
பிணங்களாக
எம் வீட்டுப் பூசையறையில்
ஒரு குங்குமச்சிமிழ்
கேள்விக்குறியாய்
தவம் இருக்கிறது
தொடரணிக்காக
மக்கள் தொடரணியாய்
சிறு வீதிகளில்
கனத்த மனதுடன்
காத்திருந்தார்கள்
குண்டுச்சத்தங்கள் தினமும்
தாலாட்டாய்
காதில் ஒலிக்கிறது
ஊர் அடங்கு முன்பே
ஊர் ஒடுங்கிப்போகிறது
விலங்குகளாய் பிறந்திருந்தால்
வயிறாற உண்டிருருப்போம்
வீடு வாசல் தேவையில்லை
நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்
இங்கு பலர் செய்த சதியாலே
தினமும் செத்து மடிகிறோம்
சதியை மதியாலே வென்று
உயர்ந்திடுவோம்..
--------------------------------

Wednesday, March 26, 2008

உறக்கமில்லா இரவுகளில்

எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------


நாங்கள் உறக்கத்தில்
விடியும் பொழுது
எங்கள் உள்ளாடைகளும் அல்லது
உயிர்களும்
சிலவேளை இரண்டுமே
பிரிந்திருக்கலாம்
எப்போதும்
எங்கள் உடம்பில்
ஊலோகத்துண்டின்
ஊடுருவல் நிகழாலாம்
அது எதற்கு நடந்தது என்று
எனக்கே தெரியாது போகும்
நாளை என்பதை
நினைத்துப் பார்ப்பதே
வேண்டாத வேலையாக உள்ளது
எதுவுமே நிச்சயமில்லை
நாளைய விடிவு ஒரு
சுடுகாட்டிலும் இருக்கலாம்
தெருக்களில் நாய்கள் குலைக்கின்றன
நாளை காலை
அவை குலைத்தமைக்கான காரணம்
தெரியவரும்
கொஞ்சம் நில்லுங்கள்
என் வீட்டு வாசலில்
யாரோ நிற்பது போல் உள்ளது
பார்த்துவிட்டு வருகிறேன்...
அது ஒன்றுமில்லை
எங்கள் வீட்டு நாய்தான்
குலைத்துக் களைத்து
வந்து படுமுத்திருக்கிறது
இப்போதெல்லாம்
எங்கள் நிழலையே
சந்தேகப்படவேண்டியிதாகவே உள்ளது
நாய்கள் சுகந்திரமாகவே
வீதியில் நடமாடுகின்றன
ஆனால் அவற்றுக்குள்ள
சுகந்திரம் எமக்கு இல்லை
இரண்டாம் சாமக் கோழியும்
கூவுகிறது
என் குழந்தைகள்
அரைவயிறு உண்டுவிட்டு
ஆழ்ந்த நித்திரையில்
என் மனைவி
இப்போதுதான்
அயர்ந்து தூங்குகிறாள்
அவளுக்கு இங்கு
வாழப்பிடிக்கவில்லை
எங்காவது போவோம் என்கிறாள்
எங்குதான் இப்போது
வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு
பக்கத்து அறையில்தான்
என் தங்கை உறங்குகிறாள்
அவளின் கணவரை காணவில்லை
எனது வயல் நிலங்கள் மட்டுமா
எம் தங்கைகளின் வாழ்வும்தான்
தரிசாகிப்போகிறது
இதோ விடிந்து விட்டது
இன்று விடிந்து விட்டது
நாளை???
-----------------------------------------