Tuesday, September 23, 2008

போலிகள்


------செம்மதி......

தேன் தடவப்பட்ட
நாக்குகள்
புற்றில் கருநாகம்ய்
வாய்க்குளியில்
நெழிந்து புரழ்கின்றன
ஒவ்வோரு உச்சரிப்புக்களும்
உயிர்களைப் பிடிப்பதற்காய் செல்லும்
பிசாசுகளைப்போல
வான வெளியில்
பரந்து செல்கிறது

அவர்களின்
கைகளில் இருந்து
வெள்ளைப் புறாக்கள்
பறக்கவிடப்படுகின்றன
அவற்றின் கால்கள்
இறுகக் கட்டப்பட்டிருக்கிறது

அவர்களின் முகங்கள்
நெருங்கி கீளே விழுகின்றன
அந்தக் கொடூரத்தை
பார்க்க முடியாது
கண்கள் ஒவ்வொன்றும்
ஒளி இழந்து போகிறது

அப்பாவிகளின்
கண்ணீர் கோடுகளை
களுவுவதற்கு என்று
அவர்களின்
இரத்தம் கேட்கிறார்கள்

சமாதானத்திற்காய்
சண்டையிடுவதாய்
சொல்கிறார்கள் ??? ......


நிரந்தரம் இல்லா நின்மதியில்......


------செம்மதி..........

அழகிய காட்டில்
ஆனந்தமாய் சிலமுயல்கள்
தங்கள் துணைகளுடன்
சல்லாபித்திருக்கின்றன

முயல் கூட்டங்களுக்குள் இருந்தும்
ஆட்டுக் கூட்டங்களுக்குள் இருந்தும்
மான்களைப் பிடிப்பதற்காய்
அந்தப்பயங்கர விலங்குகள்
செல்கின்றன
முயல்களையும் ஆடுகளையும்
அவை இப்போது
குறைவாகவே உண்கின்றன
இன்று அவற்றிற்கு
மான்களின் மாமிசம்
மிகவும் பிடித்திருக்கிறது

ஆட்டு குட்டிகளுக்கும்
முயல் குட்டிகளுக்கும்
இதுவே சுவர்க்கமாய் தெரிகிறது
சில நேரம்
மலைப் பாம்புகளும்
விசப் பாம்புகளும்
இந்தக் குட்டிகளை
தின்றுவிடுகின்றன

மான்களை பிடிக்க முடியயாது போனாலும்
அல்லது
அவை தின்று முடிக்கப்பட்டாலும்
அந்தக்கொடிய விலங்குகள்
பட்டினி கிடக்கப் போவதில்லை

கொடிய விலங்குகளின்
நிழல்களில்
சுவர்க்கம் காண்கின்றன
ஆட்டுக் குட்டிகள்

Thursday, September 18, 2008

தவிக்கும் தேசம்-2



எழுதியவர்-------

------செம்மதி

குருவிகள் எல்லாம்
கூடு கட்டி
நிம்மதியாய் வாழுது
நாங்கள் இங்கே
வீடு விட்டு
ஊரிளந்து
ஏதிலியாய்
தெருத் தெருவாய்
அலைந்து வாழ்கிறோம்
ஓடி ஒடி
களைத்துவிட்டோம்
நாம்
கடலில் விழுந்து சாவதா?

பகல் இரவாய்
பதுங்கு குழியில்
உறைந்தும் வாழ்கிறோம்
உலோகப் பறவை
கண்டு குண்டு போட்டால்
மண்ணோடு மண்ணாய்
மறைந்தே போகிறோம்

பள்ளி கோயில்
எல்லாம் இங்கே
பாசறையாய்த் தெரியுதாம்
தமிழ்ப் பெண் வைத்திருக்கும்
கைக்குழந்தை
ஏ.கே 47 ஆகப் படுகுதாம்
சிறு குழந்தை
கிழவன் கிழவி எல்லாம்
பயங்கர வாதி என்றே கணக்கு

பச்சை அரிசிச் சோறும்
பாலும் தேனும்
புசித்து வாழ்ந்தவர்
இப்போ
விளைந்தது எல்லாம்
அழிந்ததனல்
பட்டினியாய்
பசிக்க வாழுறோம்

உதவி செய்ய வந்தவரையும்
தடுத்து துரத்திவிட்டு
எம்மை கூட்டோடு
அழிக்கவா போகிறார்?
இங்கே வாரும்
இங்கே வாரும்
என்றோ எம்மை
வீம்பாய் கூப்பிடுகிறார்
அங்கேபோனால்
சும்மாய் எம்மை விடுவாரா?
மனச்சாட்சியை
சிறைப்பிடித்து
மனித உரிமைபற்றி பேசுகிறார்

ஈழ மக்கள் நாம்படும்பாடு
யாருக்கிங்கே தெரியுது
துணிவிருந்தால்
வந்து பாரும்
உணர்ந்தால்தான்
அது உமக்குப் புரியும்

உலகத் தமிழினமே!
உங்கள் இரத்த உறவுகள் நாம்
தினம் செத்து மடிகின்றோம்
நீங்களும்
எங்களுக்காக
குரல் கொடுக்க மாட்டீரோ ??

Sunday, September 14, 2008

வன்னி/2008/9


எழுதியவர்-------

------செம்மதி
சமாதான காலத்தில்
தார் பூசப்பட்ட
சிதைந்த வீதிகள்
பயணிக்க முடியாதவாறு
படை களற்றுகின்றன
அதிகாரங்களின்
போலி முகங்கள் போல்

கூவிவரும்
றிகணைக்குப் பயந்து
ஓடி ஓடி
குறை மாதத்தில்
குழந்தை பெறுகிறாள்
கற்பினி ஒருத்தி
தெரு வோர மரத்தடியில்
சேலை மறைவில்
கணவன்
எறிகணைக்குப் பலியானான்

குழந்தைகளை
காப்பாற்றுவதாய் வரும்
கிபிர் விமானங்களின்
இரச்சல் கேட்டு பயந்து
சிதறி ஓடும் சிறுவர்கள்
அடுக்ககணம்
அடையாளம் காணப்பட்ட
இலக்காகிப் போகிறது
பிள்ளைகளின்
கல்விக் கூடம்

தண்ணி முறிப்பில்
விளைந்த கதிரை
அறுப்பதற்காய்சென்றவரின்
தலை அறுத்துப்போகிறது
பல்குழல் பிரங்கியின்
எறிகணைகள்
மல்லாவியில்
முழங்காவில்லில்
விளைந்தவற்றை வந்தவர்கள்
அள்ளிச்செல்வதாய்
குமுறுகின்றார்கள்
விவசாயிகள்
பசித்த வயிற்றுடன்

முன்ணுறு ரூபா
மண்னெண்ணையிலும்
மனித சுவாசத்திலும்
புகைத்தபடி இயங்கும்
மோட்டார் சைக்கிள்கள்
வீட்டுப் பொருட்களை
மலை போல் ஏற்றி
பண்டிவிரச்சானில் இருந்து
பத்தாவது இடம் தேடி
அலைந்து திரிகிறது

எலும்புக் கூடுகளாய்
வேயாது சிதறிக் கிடக்கும்
கொட்டில்களுக்குள்
எலும்பும் தோலுமாய்
அகதி மக்கள்
நிவாரண வண்டிகளுக்காக
இன்றும் பசித்த வயிற்றுடன்

காத்திருப்புத்கள்
தொடாகின்றன...............