Thursday, October 8, 2009

ஏய் என் பேனாவே!


ஏய் என் பேனாவே!
ஏன் எழுதத்துடிக்கிறாய்?
என்னை சிறையிலிடப்போகிறாயா?
இல்லை சிரச்சேதம் செய்யப்போகிறாயா?
நீதி செத்துவிட்ட தேசத்தில்
உனக்கு என்ன வேலை?
அதர்மம் தலைவிரித்து ஆடுகையில்
உண்மை சொன்னால்
நீ சிலுவையில் அறையப்படுவாய்
அல்லது சிறையிடப்படுவாய்

ஏய் என் பேனாவே!
போர் நடந்த போர்
தவிர்ப்பு வலையத்தில்
கோரமாக கொல்லப்பட்ட
எம் உறவுகள் பற்றி
ஏதும் எழுதிவிடாதே
உண்மை செல்வது குற்றம் என்று
இருபது என்ன, முப்பது ஆண்டுகளும்
சிறையிலிடக்கூடும்

ஐயோ என் பேனாவே!
செட்டிகுளம் கானகத்தில்
சீரழியும் எம்மவர் வாழ்க்கைபற்றி
ஏதேனும் எழுதி வைத்துவிடாதே
சிவராம்,நடேசன் நிலை
எனக்கும் தந்துவிடாதே

ஏய் என் உயிர்ப் போனாவே!
இறுதிப்போரின் இறுதிக்காலத்தில்
தூய்மையான விடுதலைப்போராட்டம்
மாசுபடுத்தப்பட்ட
கதைகளை கக்கிவிடாதே
முறிந்த பனைமரமாய்
என்னையும் ஆக்கிவிடாதே

ஏய் என் நேய பேனாவே!
சொந்த நாட்டில் வதைக்கப்பட்டு
தொலைக்கப்பட்டவர்,
புதைக்கப்பட்டவர்,
சிதைக்கப்பட்டவர் கதைகளை
கிறுக்கிவிடாதே என்னையும் வதைத்து
வீசிவிட வைத்துவிடாதே

ஏய் என் தூய பேனாவே!
குற்றமற்ற குற்றவாளிகளாய்
தமிழராய் பிறந்ததே குற்றம் என்று
வழக்கும்இன்றி விசாரணையும் இன்றி
சிறை வைகப்பட்டிருக்கும்
எம்மவர் பற்றி
ஏதும் எழுதிவிடாதே
அதர்மத்தார் கையால்
என்னையும் அழித்துவிடாதே

...........செம்மதி...................
.................................................

Friday, June 5, 2009

நளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..



நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் கழிகின்றன....
-------------------------------------------------------------

செம்மதி.....................

Thursday, June 4, 2009

யார் வருவார் மீட்பராய்


__

யாரிடம் போய்ச் சொல்வது
சிதைந்துபோன எனது வாழ்வு பற்றி?
காரணம் என்ன என்று தெரியாதே
கம்பிக் கூட்டுக்குள்
கரைந்து போகும்
எனது இளமை பற்றியும்
காலைக் கடன்கூடக் கழிக்கமுடியாது
விலங்கிடப்பட்ட
எனது கைகள் பற்றியும்
மனிதனாய் இருக்கும்போதே
நரகத்தின் வேதனை காண்பது பற்றியும்
ஒரு நாளும் பசியடங்கா வயிற்றுடன்
மனித மிருகங்களின் வக்கிரகங்களால்
வதைக்கப்படுவது பற்றியும்
குற்றங்கள் சுமத்தப்படாதே நான்
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
விசித்திரத்தைபற்றியும்
யார்தான் தட்டிக்கேட்பார்கள்.

திருமணமாகியும் வெகுமதிகள் எதுவுமின்றி
என் வரவிற்காய் இன்னும் காத்திருக்கும்
அன்பான மனைவிபற்றியும்
என்னுடன் அடைக்கப்பட்ட அண்ணன்
காணாமல் போனவுடன்
எம் நிலை கண்டு அம்மா
பைத்தியமாய் அலைவது பற்றியும்
யார்தான் அக்கறை கொள்வார்?
ஆட்சி மாறும்போது
நாம் வீடு மாறுவது போல்
சிறைக்கூடங்கள் மாற்றப்படுவது பற்றியும்
பெரும் பிரச்சினைகள் மத்தியில்
எம் பிரச்சினை
சிறு பிரச்சினையாக்கப்பட்டதையும்
யார் தான் சிந்தித்துப்பார்ப்பார்?
எவர் வருவார் மீட்பராய்... ????


-----------------------------------------------

செம்மதி..................

Monday, June 1, 2009

என் நிலை என்ன?

எழுதியவர்
---------------------------------------------------------------
செம்மதி

காணவில்லைக் கணவரை-அவர்
காணமல்போனவர் பட்டியலில்
காலங்கள் கடக்கின்றன கண்ணீரோடு
அதரவு யாரும் இல்லை
அனாதரவாய் நான்  இங்கே-என்
அருமைப் பிள்ளைகளை
ஆளாக்க வேண்டி
அயராது உளைக்கையிலே
ஆந்தை விழிகள் பல-என்னை
துகில் உரியப் பார்க்கிறது
அடி மனதில் வலியுடன்
ஆத்மதிருப்திக்காய்
ஆலயம் செல்கையிலெ
அயலவரும் குத்திக்கதை பேசிடுவார்
மனசெல்லாம் ரணமாச்சு
தமிழர் பண்பாடு என்று
குங்குமம் எடுத்து வைக்கையிலே
யாருக்காக இந்தப்போட்டு
எனவசைபாடுது பல குரல்
பொட்டின்றி புவிழந்து
விதியில்நான் சென்று விட்டால்
விசித்திரமாய் பல கண்கள் மெய்கிறது
என்உடம்பில்
துணையில்லை என்ற துணிவுடன்
நோகுது ஜயோ நெஞ்சம்
என்னவனை காலன்தான் கவர்ந்தானோ -இல்லை
என்னைக் காப்பாற்ற வருவாரோ?

எனக்கே என்னைப் புரியவில்லை
என்நிலை என்ன தெரியவில்லை???
--------------------------------------------------------