Wednesday, October 29, 2008

இறைமையின் பெயரால்


------செம்மதி......
............................................
இராணுவப்பிரங்கிகளுக்குள்
அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர்
குருதிச்சுனையில்
புதைந்த கவசவண்டிகள்
அப்பாவிகளின் பிணங்களின் மேல்
நகர்த்தப்படுகின்றன
துப்பாக்கிகளின் ஒவ்வோரு தோட்டாக்களிலும்
மனித உயிர்கள் குடியிருந்தன
நாளைய பகல்கள்
இன்றைய இரவுகளைக் கொடுத்து
வேண்டப்பட்டுக்கொண்டிருந்தன
நாளைய தீபாவளிக்கு
பட்டாசு வெடிக்கும் கனவுடன் துங்கிய
பிஞ்சுகளை
எறிகணைகள் பட்டாசுகளாய்
பிய்த்துப் போகிறது.
குழந்தைகள் வெடிகுண்டுச்சிதறல்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தனர்
பதுங்கு குழிகளுக்குள்
ஒரு தேசம் குடியிருந்தது
வெடிகுண்டுகளுக்குப்பயந்தவையாய்
மழை வெள்ளமும் பதுங்கு குழிக்குள்
பதுங்கிக்கொண்டது
கால்களுக்குக்கீழ் மழை வெள்ளம்
தலைக்குமேல் கந்தக மூளையர் கக்கும்
உலோகச்சிதறல்கள்
உவர்ப்பு நீரிலும் சிவப்பு நீரிலும்
கரைந்து போனது ஏதிலிகள் வாழ்வு
அகதிகளின் உணவுத்தட்டுக்களில்
ஆயுதங்கள் இடப்பட்டிருந்தன
பிணங்கள் நிலங்களை
விழுங்கிக்கொண்டிருந்கன
ஆவிகள்போரில் நிற்பதாய்
படைகளின் துணைவியற்கு
சம்பளம் வழங்கப்பட்டது
ஏழைகள் ஏலம்விடப்பட்டனர்
இறைமையின் பேயரால்
.............................................
.................................

Tuesday, October 14, 2008

கானலும் கண்ணீரும்

...........செம்மதி.............

அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்
போகும் இடம்
அவர்களுக்கே தெரியவில்லை
நடந்த பாதையில் சுவடுகள்
கேள்விக்குறிகளாய்க் கிடக்க
கச்சைகளைக் களற்றி
மகுடமாக்கிச் சூட்டப்போகிறார்கள்

பயிர் வளர்க்கச் சென்றவர்கள்
வேலியைப் பிரித்துவிட்டு
பயிரையும் பிடுங்கி எறியப் போகிறார்கள்
உடம்பிற்குள் கெட்ட ஆவி புகுந்ததுபோல
ஆக்குரோசமாகப்பேசுகிறார்கள்
பயிரை எப்படி அழிக்கலாம் என்பதுபற்றி
உரமாகிப்போனவரின்
உணர்வுகளை மிதித்து
பகட்டையும் பணத்தையும்
தேடிப்போகிறார்கள்

நல்ல தீன் கிடைக்குமென்று
முட்டைக் கோழியாகப் போகிறார்கள்
இட்டுமுடிந்ததும்
இறச்சிக் கோழியாவதற்கு
பல்லக்கில் செல்வதாய்
பாடையில் ஏறிவிட்டார்கள்
உயிர் உள்ள பிணங்களாகி
கானல் நீரில் நீச்சலடித்து
கண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறார்கள்

...................................................................................................