Wednesday, March 26, 2008

உறக்கமில்லா இரவுகளில்

எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------


நாங்கள் உறக்கத்தில்
விடியும் பொழுது
எங்கள் உள்ளாடைகளும் அல்லது
உயிர்களும்
சிலவேளை இரண்டுமே
பிரிந்திருக்கலாம்
எப்போதும்
எங்கள் உடம்பில்
ஊலோகத்துண்டின்
ஊடுருவல் நிகழாலாம்
அது எதற்கு நடந்தது என்று
எனக்கே தெரியாது போகும்
நாளை என்பதை
நினைத்துப் பார்ப்பதே
வேண்டாத வேலையாக உள்ளது
எதுவுமே நிச்சயமில்லை
நாளைய விடிவு ஒரு
சுடுகாட்டிலும் இருக்கலாம்
தெருக்களில் நாய்கள் குலைக்கின்றன
நாளை காலை
அவை குலைத்தமைக்கான காரணம்
தெரியவரும்
கொஞ்சம் நில்லுங்கள்
என் வீட்டு வாசலில்
யாரோ நிற்பது போல் உள்ளது
பார்த்துவிட்டு வருகிறேன்...
அது ஒன்றுமில்லை
எங்கள் வீட்டு நாய்தான்
குலைத்துக் களைத்து
வந்து படுமுத்திருக்கிறது
இப்போதெல்லாம்
எங்கள் நிழலையே
சந்தேகப்படவேண்டியிதாகவே உள்ளது
நாய்கள் சுகந்திரமாகவே
வீதியில் நடமாடுகின்றன
ஆனால் அவற்றுக்குள்ள
சுகந்திரம் எமக்கு இல்லை
இரண்டாம் சாமக் கோழியும்
கூவுகிறது
என் குழந்தைகள்
அரைவயிறு உண்டுவிட்டு
ஆழ்ந்த நித்திரையில்
என் மனைவி
இப்போதுதான்
அயர்ந்து தூங்குகிறாள்
அவளுக்கு இங்கு
வாழப்பிடிக்கவில்லை
எங்காவது போவோம் என்கிறாள்
எங்குதான் இப்போது
வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு
பக்கத்து அறையில்தான்
என் தங்கை உறங்குகிறாள்
அவளின் கணவரை காணவில்லை
எனது வயல் நிலங்கள் மட்டுமா
எம் தங்கைகளின் வாழ்வும்தான்
தரிசாகிப்போகிறது
இதோ விடிந்து விட்டது
இன்று விடிந்து விட்டது
நாளை???
-----------------------------------------

No comments: