Friday, March 28, 2008

தவிக்கும்தேசம்


எழுதியவர்_____________________________
--------------------------செம்மதி

------------------------------------------------------------------



தாய்மார்பு
சுரக்கமறுத்ததனால்
அழும் குழநதையின்
அழுகுரல்
முகாரியாய் ஒலித்தது
அடங்கிப்போகிறது
பட்டினியாய் இருக்கும்
பெற்றதாய் வயிறு
பற்றி எரிகின்றது
பால்மாப் பைகள்
கால்முளைத்துவிலகி ஒடுகின்றது
ஐந்து ருபாவிற்கு வாங்கிய
ஒருகிலோ வாழைப்பழத்தின் தோல்
எம் பசி போக்காது
திண்ணையில் சிதறிக்கிடக்கிறது
எம்மைப்போல
மழை ஒழுக்கில்
நனையாமல்
தாய்மடியில் தஞ்சமடையும்
தங்கையை
தாயின்கண்ணீரே
நனைக்கின்றது
எனக்கு மீசை அரும்புகிறது
வெளியெ போகவிடுகிறாள்ளில்லை
அம்மா
காதல்வந்தவிடும் என்பதற்காகஇல்லை
மரணம் வந்துவிடக்கூடாது என்பதற்காக
பள்ளிசெல்லும்
என் தங்கையை
தீண்டப்பார்க்கிறார்கள்
கைதிகளுடன்
சிறையிருக்கும்
பெண்சுகம் இன்றித்தவிக்கும்
சிறைக்காவலர்கள்
விறைத்த அங்கத்துடன்
எரிகின்ற குப்பிவிளக்கின்
மங்கிய ஒளியில்
காணாமல்ப் போன
அண்ணனின் புகைப்படம் தெரிகிறது
கூடவே அப்பாவும்
விடைகாணாப்புதிர்களாக
காணாமல் போனவர்கள்
கண்டுபிடிக்கப்படுகிறார்கள்
பிணங்களாக
எம் வீட்டுப் பூசையறையில்
ஒரு குங்குமச்சிமிழ்
கேள்விக்குறியாய்
தவம் இருக்கிறது
தொடரணிக்காக
மக்கள் தொடரணியாய்
சிறு வீதிகளில்
கனத்த மனதுடன்
காத்திருந்தார்கள்
குண்டுச்சத்தங்கள் தினமும்
தாலாட்டாய்
காதில் ஒலிக்கிறது
ஊர் அடங்கு முன்பே
ஊர் ஒடுங்கிப்போகிறது
விலங்குகளாய் பிறந்திருந்தால்
வயிறாற உண்டிருருப்போம்
வீடு வாசல் தேவையில்லை
நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்
இங்கு பலர் செய்த சதியாலே
தினமும் செத்து மடிகிறோம்
சதியை மதியாலே வென்று
உயர்ந்திடுவோம்..
--------------------------------

No comments: