Monday, November 17, 2008

வாழ்வும் வலியும்

...........செம்மதி.............
1
என்னவளே!
நானும் நீயும்
காதலித்த பள்ளிக்கூடம்
வசந்தங்களைத் தொலைத்து
வதைபட்டோர்
ஒதுங்குமிடமாச்சுகடி
காலநேரம் தெரியாமல்
கைகோர்த்து கதையளந்த
ஆலமரத்தடியில
அடிபாடு நடக்குதெண்டு
சனம் கதைக்குதடி
உன் அண்ணன்
ஊர்திரட்டி துரத்திவந்த
வயல் வெளிகள்
நாம் ஒழித்த வடலிக்கூடல்
எல்லாம் பாழ்பட்டுப் போச்சுதடி
எம் காதலுக்குக் கைகொடுத்த
காந்தனும் சாந்தனும்
களப்பலி ஆகினராம்
என்ரதம்பி முகமாலையில
முன்னுக்கு நிக்கிறானாம்
உன் அண்ணன் நெஞ்சில காயப்பட்டு
கொஸ்பிற்ரல்ல இருக்கிறானாம்

2
நீ எனக்கும் நான் உனக்கும்
முத்தமிடக் காத்திருக்கும்
ஏகாந்த இரவுகளில்
ஏதேதோ நினைவெல்லாம்
வந்து வதைத்துப்போகுதடி
உன் செவ் உதடுகள்
இயந்திரப்பறவைகள்
பிய்த்தெறிந்த குழந்தைகளின்
தசைத்துண்டகளாய்த் தெரியுதடி
பிணைந்கிருக்கையிலேயே
பிணங்களாயும் போகலாம்
என் அணைப்பில் நீ தூங்க
உன் அணைப்பில் நான் தூங்க
அகதிக்குழந்தைகளின்
அவலக்குரலும்
அடுத்தவீட்டு மரண ஓலமும்
காதைக்குடைந்து
எம்மைத்தலை குனிய வைக்குதடி
கனவிலும் பிணங்கள்தான்
காட்சிக்கு வருகுது
விடிந்ததும் அதுவே
நியமாயும் இருக்குது
எறும்புபோல சேமித்து
கட்டிய வீட்டையும்
நாசமாக்கிப் போட்டான்
பத்தாவது இடத்திலையும்
வங்கர் வெட்டியாச்சு
எங்கட பிள்ளையள்
எங்கபோட்டுதுகள்
ஏதோ இரையுது மேல
வாங்கோ போவம்
வங்கறுக்குள்ள
..............................

No comments: